HomeLive BroadcastAudio VideoBooksGalleryLyrics
Members Login | Not yet a member? Sign Up Now! It's Free!
Arabic
Hamd
Qaseeda
Salaam
Mawlid
Urdu
Naat Shareef
Salam
Qawwali Shareef
Hamd & Munajaat
Qaseeda
Ghazal
Mankabats
English
English Praise Songs
Tamil
இறைத் துதி
நாயகம் துதி
உர்து - தமிழ் புகழ்பா
ஸஹாபாக்கள்
இறை நேசர்கள்
புனித நாள்கள்
Punjabi
Naat Shareef
முஹ்யித்தீன் மாலை

அருளும் அன்பும் நிறைந்தோனாம் ஆதி பெரியோன் அல்லாஹ்வின்
பெருகும் ஞானச் சுடரொளியின் பெயரே குத்பு முஹ்யித்தீன்

ஈரான் நாட்டு தபரீஸின் இலங்கும் ஜீலான் நகரத்தின்
பேராம் நீபுச் சிற்றூரில் பிறந்தார் ஷெய்கு முஹ்யித்தீன்

எழிலார் ஹிஜ்ரி நானூறும் எழுபதும் சென்று ரமழானின்
வழியாய் வந்த முதற் பிறையில் வடிவாய் வந்தார் முஹ்யித்தீன்

பெரியார் செய்யிது அபூசாலிஹ் பெண்கள் திலகம் பாத்திமா
அரியார் பெற்றோர் இருவர்க்கும் அணியாய் வந்தார் முஹ்யித்தீன்

பெருமான் நபிகள் சந்ததியில் பெரியார் ஹஸன் ஹுஸைன் மரபில்
பெருகும் தலைமுறை ஈரேழின் பேறே கௌது முஹ்யித்தீன்

அறியாக் குழவிப் பருவத்தே அருமை ரமழான் மாதத்தே
நெறியாய்ப் பகல்பால் அருந்தாமல் நேர்மை காத்தார் முஹ்யித்தீன்

சின்னஞ்சிறிய பிராயத்தில் சீரார் தந்தை மறைந்தேக
அன்னையர் அன்பு பார்வையிலே அறிவை வளர்த்தார் முஹ்யித்தீன்

இறையின் னுரையாம் திருமறையை இன்பே மொழியும் ஏழாண்டில்
நிறைவாயுள்ள ஏடேத்தும் நீர்மை ஹாபிஸ் முஹ்யித்தீன்

மறையை ஓதும் பள்ளியிலே மாணவர் நோக்கி வானவர்கள்
இறையின் நேயர்க்கிடமளிக்க இயம்பக் கண்டார் முஹ்யித்தீன்

அலையார் பதினென் ஆண்டகையை அறிவுத் தாகம் மேலிட்டு
கலையார் பக்தாத் சுனையாடும் கருத்தைக் கொண்டார் முஹ்யித்தீன்

ஊறும் அன்பை உள்வைத்தே உண்மை உயர்வை முன்வைத்த
பேறாம் அன்னை ஆசியுடன் பேரு ரேகும் முஹ்யித்தீன்

வழியிற் கொள்ளை செய்வோரை வாய்மை நெறியிற் செலுத்துந்தீன்
வழியிற் போக்கி அன்னையுரை வன்மை காட்டும் முஹ்யித்தீன்

அரிய அரபும் இலக்கியமும் அண்ணல் நபியின் மணிமொழியும்
பெரியோன் மறையின் விரிவுரையும் பிக்ஹூம் பயின்றார் முஹ்யித்தீன்

கைப் பொருளதனைப் பிறர்க்குதவி கடும்பசி வறுமைக் குள்ளாகி
மெய்ப்பொருள் தேடி ஏழாண்டில் மேதையானார் முஹ்யித்தீன்

ஹம்மாத் ஷெய்கின் போதனையால் ஆத்ம ஞானப் பயிற்சியினை
செம்மையாக மூன்றாண்டில் செய்து முடித்தார் முஹ்யித்தீன்

இறையின் வீடாம் கஃபாவை இதயங் குளிரச் சுற்றுகையில்
நிறையும் ஞான உணர்வுற்று நெஞ்சம் மலர்ந்தார் முஹ்யித்தீன்

கதிரோன் எரிக்கும் கற்காட்டில் கருணை நாயகன் அருள் வேண்டி
அதிரா முறையில் ஐம்புலனும் அடக்கியாண்டார் முஹ்யித்தீன்

தனித்தும் விழித்தும் புசியாமல் தண்ணீர் கூட அருந்தாமல்
அனைத்தும் துறந்தே மூன்றாண்டின் அருந்தவ மாற்றும் முஹ்யித்தீன்

மாதவஞ் செய்ய கண்டோர்கள் மாய்ந்தாரெனவே எடுத்தேகி
ஓதும் இறுதிச் சடங்காற்ற உணர்வு பெற்றார் முஹ்யித்தீன்

நபிமார் ஒலிமார் ஞானியரை நாடும்; முறையில் சோதிக்கும்
நபியார் ஹிழ்ரின் போதனையால் நலமே பெற்றார் முஹ்யித்தீன்

வாழும் நகரை விட்டேகி வறண்ட பதினோராண்டுகளும்
பாழும் அஜமிக் கோட்டைக்குள் பாங்காய் உயர்ந்தார் முஹ்யித்தீன்

பற்றையற்றோன் பற்றுறவே பான்மறை முழுதும் இரவோதி
ஒற்றைக் காலில் நோற்றிறையின் ஒளியைக் கண்டார் முஹ்யித்தீன்

இரவுத் தொழுகை வுளுவுடனே இனிய பஜ்ரின் வணக்கத்தை
மரபு படியே பல்லாண்டு மகிழ்வாய் முடித்தார் முஹ்யித்தீன்

என்றும் நின்று குன்றாமல் ஏற்றுச் செய்த உயர்வினைகள்
இன்றும் அன்றும் பார்காணா இணையில் தவமே முஹ்யித்தீன்

அஞ்சக் கொஞ்சும் ஷைத்தானின் அன்புக் கெஞ்சி துஞ்சாமல்
நெஞ்சம் மிஞ்சும் வாஞ்சை மிக நஞ்சம் கொன்றார் முஹ்யித்தீன்

இதயப் பூங்கா மக்காவில் இரண்டாம் ஹஜ்ஜை நிறைவேற்றி
உதயச் சுடராம் பெருமான்பால் உவந்தே சென்றார் முஹ்யித்தீன்

அருமைப் பாட்டார் அருகுற்றார் அன்பை பொழிந்து நெகிழ்வுற்றார்
ஒருமை காண நாற்பது நாள் ஒன்றித் தோய்ந்தார் முஹ்யித்தீன்

மருளிற் சிக்கும் இனத்தோரை மதியால் தெருட்;ட வழிகாட்டும்
கருணை பொழிலாம் நாயகரைக் கனவிற் கண்டார் முஹ்யித்தீன்

எல்லாம் வல்லோன் இன்னருளால் ஏந்தல் நபிகள் பொன்னுரையால்
நல்லார் அலியின் ஆசியினால் நாநல முற்றார் முஹ்யித்தீன்

பக்திச் சுடராம் நல்லுரையை பாபுல் அஜ்ஸாம் பள்ளியிலே
நித்தம் பருகி இன்பமுற நிறைத்தோர் கண்டார் மு    ஹ்யித்தீன்

பழுமரம் நாடும் பறவைகள் போல் பயனுரை கேட்க பாரெல்லாம்
குழுமுதல் கண்டு பெருவெளியைக் குறித்தார் குத்பு முஹ்யித்தீன்

அரசியல் ஆள்வோர் கலீஃபாக்கள் ஆலிம் ஷெய்கு அதிபதிகள்
பரமன் படைப்பின் பல்லோர்க்கும் பண்புரை வழங்கும் முஹ்யித்தீன்

பொருளியல் அரசியல் சமுதாயம் போற்றும் ஞானம் அறிவியல்கள்
திருமறை நபிமொழி விளக்கமுடன் தீந்தீன் முழக்கும் முஹ்யித்தீன்

புத்துயிர் பெற்றார் கிறிஸ்தவர்கள் புதுநெறி கண்டார் யூதர்கள்
சித்தம் தெளிந்தார் தீயோர்கள் சிந்தைக் குளிர்ந்தார் முஹ்யித்தீன்

உள்ளக் கிண்ணம் நிறைவடைய உண்மை ஞானம் தேடிவரும்
கள்ளம் கொல்லும் சீடர்க்கு கௌதுல் அஃழம் முஹ்யித்தீன்

ஞாலம் போற்றும் அறிவு பெற நாடி வந்த மாணவர்க்குக்
கால வானில் தாரகையாம் கல்வி புகட்டும் முஹ்யித்தீன்

கானில் கூடிய தவமாற்றி கருத்தைத் துலக்கும் வழிகாட்டி
நானிலம் போற்றும் மெய்ஞ்ஞான நெறியைப் புகன்றார் முஹ்யித்தீன்

ஞானக் கடலில் வழிமாறி நடுங்கும் கலமாம் ஞானியர்க்குத்
தானங்காட்டும் ஜுதி மலை தலைமை தாங்கும் முஹ்யித்தீன்

எண்மாண்புடைய பாடல்கள் ஏற்றும் நல்கும் குத்பாக்கள்
நுண்மாண்புடைய கஸீதாக்கள் நுவன்றார் ஷெய்கு முஹ்யித்தீன்

ஆகம் நிறையும் கருத்தெல்லாம் அடக்கிக் கூறி நல்லறிவுத்
தாகம் தீர்க்கும் குன்யத்து தாலிபீன் தரு முஹ்யித்தீன்

அழியா தொளிரும் செல்வத்தை அளிக்கும் பத்ஹுர் ரப்பானி
வழியாய் அரிதாம் பேருரைகள் வழங்கும் வள்ளல் முஹ்யித்தீன்

மறைவாம் ஞானச் சுவைமல்கும் மாண்பார் புதுஹுல் கைபதனை
நிறைவாய்க்காட்டி நெஞ்சிருனை நீக்கும் காஜா முஹ்யித்தீன்

செயலில் நலிந்து மெலிவுற்ற செம்மை இஸ்லாம் நெறியோங்க
உயர்வாம் மருந்தால் உயிரூட்டும் உரிய மருத்துவர் முஹ்யித்தீன்

அருமை மனைவியர் நால்வருடன் ஆண்மக விருபத் தெழுவருடன்
இருபத் திருவர் பெண்மகவாய் இல்லில் இலங்கும் முஹ்யித்தீன்

மனைவியர் நலனைப் பேணிடுதல் மழலைக் குழவியை பேணிடுதல்
மனைவியின் வினைகள் ஆற்றிடுதல் மகிழ்ந்தே செய்தார் முஹ்யித்தீன்

காலியொருவரை நியமித்த கலீஃபா செயலைக் கண்டித்து
வேலை நீக்கி வேறொருவர் விரைவில் கண்டார் முஹ்யித்தீன்

கலீஃபா அளித்த பணப்பையைக் கரத்தில் எடுத்து பிழிந்தவுடன்
வலியாற் கொண்ட இரத்தமெல்லாம் வடியக் கண்டார் முஹ்யித்தீன்

மாதுளை வேண்டிச் சோதித்த மாசார் கலீஃபா கைதொட்ட
மாதுளையிற் புழு நெளிந்திடவும் மனத்தையளந்தார் முஹ்யித்தீன்

அழுக்காறுந்த அவை சேர்ந்த அறிஞர் மனத்துக் கோளறிந்தே
ஒழுக்கம் காட்டும் உரையீந்த ஒல்காப்; புகழின் முஹ்யித்தீன்

வணிகர் பஜ்லுல்லா மகனார் வாடக் கண்ட பெருநோயைத்
தணியச் செய்தார் இறையருளால் தலைவர் தர்வேஷ் முஹ்யித்தீன்

உள்ளில் உள்ளும் பொருளெல்லாம் உரையால் ஊட்ட அபுல் ஹஸனார்
விள்ளற் கரிய நிலையுற்று வியந்து போற்றும் முஹ்யித்தீன்

மறையின் அறிவால் செருக்குற்ற மதியா இப்னு ஜௌஸீயை
மறையின் அரிய விளக்கத்தால் மதிப்பை யுணர்த்தும் முஹ்யித்தீன்

இன்னா நூலை மாய்த்ததனை இனிய நூலாய் மாற்றிய பின்
மன்சூர் மகனார் மனநோயை மாயச் செய்தார் முஹ்யித்தீன்

ஊழின் வலியைப் பேசுகையில் உடலைச் சுற்றிப் பாம்பு விழ
தாழா நின்று தானவனின் தன்மை பகர்ந்தார் முஹ்யித்தீன்

கல்லுங் கசியக் கனிந்துரைந்து கருத்துக்கரிய விருந்தூட்டும்
சொல்லும் செயலும் மாறாத சோபை இலங்கும் முஹ்யித்தீன்

தக்வா என்னும் வாள்கொண்டு தௌஹீதென்னும் படை கொண்டு
சிக்கச் செய்யும் ஷைத்தானை சிதைக்கச் சொன்னார் முஹ்யித்தீன்

அல்லாஹ் அவனை அஞ்சிடுக அவன் பால் தேவையை முறையிடுக
எல்லாமவனே எனமகற்கே இறுதி யுரைத்தார் முஹ்யித்தீன்

அல்லின் தொழுகை முடித்தார்கள் அழகாய் கலிமா நவின்றார்கள்
அல்லாஹ்வென்றார் மும்முரைகள் ஆவி துறந்தார் முஹ்யித்தீன்

ஆண்டுகள் தொண்ணூற் றொன்டு வரை அரிய வாழ்வாற் புகழுற்று
மாண்பாரிறையின் பணியேற்று மறைந்தார் நாதர் முஹ்யித்தீன்

திகழும் ரபீவுல் ஆகிர் பிறை திங்கள் வளரும் பதினொன்றில்
மகிழ்வாய் நினைவு உலகெங்கும் மங்காதொளிரும் முஹ்யித்தீன்

எங்கள் கௌது ஸமதானி ஏகன் கிந்தீல் நூரானி
எங்கள் குதுபு ரப்பானி ஏந்தல் சுல்தான் முஹ்யித்தீன்

அப்தால் மஹபூப் ஸுப்ஹானி அன்பார் மஃஷுக் ரஹ்மானி
அப்துல் காதிர் ஜீலானி ஆரிஃப் நாதர் முஹ்யித்தீன்

நல்லோர் பெரியோர்க் கின்னுயிரே நலமார் நெஞ்சில் மன்னுயிரே
பொல்லார்க்கிடியே றானவரே பொன்றாச் செல்வர் முஹ்யித்தீன்

மாசில் மணியே கண்மணியே மறையா நெறியின் மாமணியே
வீசும் பத்திச் சுடர் மணியே விளங்கும் ஜமால் முஹ்யித்தீன்

அகிலம் ஓங்க வருமுகிலே அமிழ்த ஞானப் பெருமுகிலே
மகிழும் தன்மை தருமுகிலே மறைமா முகிலே முஹ்யித்தீன்

அன்புக் கடலே அருட்கடலே அனைத்தும் கொண்ட பெருங்கடலே
இன்பக் கடலே ஆழ்கடலே இதயக் கடலே முஹ்யித்தீன்

செல்வப் பேறே நற்பேறே செஞ்சொல் ஊறும் பொற்பேறே
கல்விப் பேறே பக்தாதின் காவற் பேறே முஹ்யித்தீன்

மாதவர்க்கரசே முஹ்யித்தீன் மாண்பே றரசே முஹ்யித்தீன்
பூதலத் தரசர் மகிழ்ந்தேத்தும் புகழின் அரசே முஹ்யித்தீன்

காரண வாழ்வே முஹ்யித்தீன் கண்ணிய வாழ்வே முஹ்யித்தீன்
பூரண வாழ்வே முஹ்யித்தீன் புண்ணிய வாழ்வே முஹ்யித்தீன்

ஓலிகட்கொலியே முஹ்யித்தீன் ஒளிகட்கொளியே முஹ்யித்தீன்
கலிகள் தீர்க்கும் முஹ்யித்தீன் கரையில் ஆழி முஹ்யித்தீன்

நான் தான் தேய்ந்தீர் முஹ்யித்தீன் நோன்பான் வாழ்ந்தீர் முஹ்யித்தீன்
தீன்தேன் தோய்ந்தீர் முஹ்யித்தீன் தீன்தீன் தீந்தீன் முஹ்யித்தீன்


பூமான் கோமான் முஹ்யித்தீன் பொலிவார் சீமான் முஹ்யித்தீன்
ஈமான் ஓங்கும் முஹ்யித்தீன் இன்பே பொங்கும் முஹ்யித்தீன்

காவே கோவே முஹ்யித்தீன் கவியே கமழும் முஹ்யித்தீன்
பூவே நாவே முஹ்யித்தீன் புவியே புகழும் முஹ்யித்தீன்

நாதா நீதா முஹ்யித்தீன் ஞான மேதா முஹ்யித்தீன்
மாதா பாதா முஹ்யித்தீன் புவியே புகழும் முஹ்யித்தீன்

உள்ளம் பொங்கும் ஊக்கமுடன் உயர்வா யாயிரம் முறை நாமம்
விள்ளும் அன்பர் துயர் போக்க விளங்கித் தோன்றும் முஹ்யித்தீன்
 

Important Notice:
Mediaislam.com is mainly optimized for Mozilla Firefox Browser. Please click the button below to download & install it. It's free, fast and simple to use.


Google

You need real player software to play the media files. Please click the image to download the free player
© mediaislam.com